இந்த நாளில் இருந்து தேடிப்போய் உதவி செய்யவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ருத்ரன் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் ராகவா லாரன்ஸ் பி.வாசு இயக்கத்தில் உருவாக்கி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
செப்டம்பர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது X பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ராகவேந்திரா சுவாமி ஜீவசமாதி அடைந்து இன்று 352வது வருஷம். இந்த நாளில் வருஷம் வருஷம் நல்ல முடிவு எடுப்பேன். அந்த வகையில், இந்த வருஷமும் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் என்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். இந்த நாளில் இருந்து தேடிப்போய் உதவி செய்யவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு செய்தால் அது உதவி. தேடிப்போய் உதவி செய்தால் அது தர்மம். கஷ்டப்படுகின்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் அது கடவுளிடம் போய் சேரும் என்று சொல்லுவாங்க என்று கூறிய அவர், எனக்கு தெரிந்த ஆன்மீகம் இது தான் என்றும் கூறி இருக்கிறார்.