ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர் மார்க் மார்கோவிஸ் (83) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
பென்சில்வேனியா மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட மார்கோவிஸ், 1970களில் சினிமாவில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதை தொடர்ந்து நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்த அவர், உலக அளவில் புகழ்பெற்ற பிரேக்கிங் பேட், பெட்டர் சால் சால் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஸ்கார்பேஸ் போன்ற பிரபல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் பிரேக்கிங் பேட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஹெக்டர் சாலமான்கா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் இவர் புகழ் பெற்றார்.
தற்போது 83 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக நியுயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.