நடிகர் விஜய் (Vijay) 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை வருகிற 3ம் தேதி சந்திக்கிறார்.
நடிகர் விஜய் (Vijay) அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அதிகரித்துள்ள நிலையில், அதை மையப்படுத்திய, அதனை உறுதிபடுத்தும் வகையிலான பேச்சுகள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது, விஜய் தனது பட வேலைகளை முடித்துக்கொண்டு அரசியலில் குதிக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். தொகுதி வாரியாக சிறந்த 6 மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் சென்னைக்கு வரவழைக்க விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை மதுரவாயலில் பல்வேறு அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தில், நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 6000 பேர் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு விஜய் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தரப்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய்யின் மேற்பார்வையில் சமூக பணி ஆற்றி வரும் விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்களில் சொல்லுமளவிற்கான வெற்றிகள் பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.
அதை தொடர்ந்து, சமீப காலமாக பல்வேறு சமூக நலப்பணிகளில் விஜய் மக்கள் இயக்கம் ஈடுபட்டு வருகிறது.
நடிகர் விஜய் அவர்களை சந்தித்து வருவதும், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் விஜய் ரசிகர்கள் மாநாடு என்ற செய்திகள் பரவி வருவதும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அறிகுறிக்களாகவே பார்க்கப்படும் நிலையில், வரப்போகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அவர்களது பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.