குன்றத்தூரில், மாணவர் ஒருவர் பேருந்து படிகட்டில் இருந்து தவறி விழுந்து தனது இரண்டு கால்களையும் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர் தவறி கீழே விழுந்ததில் அவரது இரண்டு கால்களும் துண்டாகியுள்ளது. இந்த நிலையில், பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சானா நாச்சியார் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை குன்றத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். குன்றத்தூர் மட்டுமல்லாமல் போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பேருந்துகளில் செல்லும் போது படிகட்டிலும், ஜன்னல்களிலும் தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சில சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், குன்றத்தூரில் பஸ் படிகட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை இறக்கிவிட்டு நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்தார்.
அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் இந்த செயல்களை தட்டிக் கேட்காத பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் ஆபாசமாக பேசி திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஞ்சனா நாச்சியாரை காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்தனர். அதன் பின்னர் அன்றைய தினமே அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
ரஞ்சனா நாச்சியாரின் இந்த செயல் பெரும் விவாதத்திற்கு உள்ளது. மாணவர்களை தட்டிக்கேட்க காவல்துறை இருக்கிறது என்றும் இவர் யார் சட்டத்தை கையில் எடுப்பதற்கு என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனிடையே பேருந்து படிக்கட்டில் தொங்கிச் சென்ற மாணவர்களை என் பிள்ளைகள் போல நினைத்துதான் கண்டித்தேன். வேறு எதுவும் தவறான நோக்கம் கிடையாது. இதற்காக நான் வருந்துகிறேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை குன்றத்தூரில், ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை தாக்கிய அதே இடத்தில் அரசுப் பேருந்தின் படிகட்டில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர் ஒருவர், தவறி கீழே விழுந்த நிலையில், மாணவரின் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் மாணவனின் இரண்டு கால்களும் துண்டாகியது.
இதனால் வலியில் அலறி துடித்த மாணவனை மீட்ட பொதுமக்கள், உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரஞ்சனா நாச்சியார் நேரில் சென்று மாணவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார், “இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஒரு தாயாக துடிதுடித்து இங்கு வந்துள்ளேன். பேருந்து படிக்கட்டில் தொங்கிச் சென்ற அந்த மாணவர்களை எதற்காக அன்று நான் அடித்தேன் என்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் அப்படி செய்த பிறகாவது, அரசாங்கம் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை.
இன்று ஒரு மாணவனுக்கு கால்களே போய்விட்டது. இனி அவன் வாழ்நாள் முழுவதும் அவனது அன்றாட வேலைகளை கூட யாருடைய உதவியுடன் தான் செய்ய வேண்டும். பாவம் அந்த மாணவன் மனசு என்ன பாடுபடும். அவனை பார்த்து அவருடைய அம்மா எப்படி தினம் தினம் துடித்து போவாங்க. பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவை தாழிடக்கூடிய பேருந்துகளை அரசு அதிகப்படியாக கொண்டு வர வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும். இப்போது நான் இங்கு வந்ததற்கும் ஏதேதோ சாயம் பூசுவார்கள். அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என கூறினார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் ரஞ்சனா மாணவர்களை கண்டித்த நிலையில், தற்போது இந்த கோர விபத்து அரங்கேறி இருக்கிறது. அன்றைக்கு ரஞ்சனா மாணவர்களை கண்டித்தபோதே அரசாங்கம் விழித்துக் கொண்டு பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வதற்கு கடிவாளம் போட்டிருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.