காற்று மாசுபாட்டை தடுக்க அரசு விதித்துள்ள விதிகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டில்லி சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.
அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டில்லி சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள அமைச்சர் கோபால் ராய் : டில்லியில் காற்று மாசு காரணமாக 10, 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு நவ.11ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என மீண்டும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
நவ.,13 முதல் 20 வரை வாகனங்களில் ஒற்றை இலக்கு- இரட்டை இலக்கு முறை அமல்படுத்தப்படும்.
டில்லி நகருக்குள் டிசல் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பாக விதிக்கப்பட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், வாகன பயன்பாட்டை குறைக்க 50 சதவீதம் பணியாளர் வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.