குறுவை நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு வழங்க மறுத்து வருவது நியாயம் அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறுவை நெற்பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், மூன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் வாடுகின்றன.
அவற்றில் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களைக் காப்பாற்றவே முடியாது என்று உழவர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், அவற்றுக்கான இழப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்பு பயிர்க் காப்பீடு மூலம் உழவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு வரை குறுவை நெற்பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் நெல் தவிர்த்து மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி போன்ற பிற குறுவை பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
குறுவை நெற்பயிர்களுக்கும் காப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு தான் பயிர்க் காப்பீடு வழங்க மறுத்து வருவது நியாயமல்ல. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியை புரிந்துகொள்ள முடிகிறது. ஒருபுறம் இத்திட்டத்திற்கான பங்களிப்பை மத்திய அரசு 49 விழுக்காட்டில் இருந்து 25-30% என்ற அளவுக்கு குறைத்து விட்டது.
மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன.
பயிர்க் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும்கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பயிர்க் காப்பீடு செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூ.30,000 வரை காப்பீடு கிடைக்கும். ஆனால், தமிழக அரசு அதிக அளவாக ரூ.5000 மட்டுமே நிவாரணம் வழங்கும். அத்தொகை இடுபொருள் செலவுக்குக் கூட ஈடாகாது.
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமாவது இழப்பீடு வழங்கப்பட்டால் தான் உழவர்கள் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும்.
குறுவை நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். குறுவை பயிர்களுக்கான காப்பீட்டுத் தேதி ஏற்கெனவே முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டை சிறப்பு நேர்வாக கருதி இம்மாத இறுதி வரை காப்பீட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றொருபுறம் 2022-23 ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.560 கோடி காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் நேற்று அறிவித்திருக்கிறார்.
7 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ரூ.560 கோடி என்றால், ஏக்கருக்கு ரூ.8,000 மட்டுமே கிடைக்கும். இது போதுமானதல்ல. பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரமாவது காப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.