தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(Annamalai) பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ,தெலுங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்.
இது வினியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டல் மற்றும் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும்.மஞ்சள் வாரியம் அமைப்பதற்காக தெலுங்கானா மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மஞ்சள் விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் தமிழக மஞ்சள் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது நாடு 1.1 மில்லியன் டன் மஞ்சள் உற்பத்தி செய்கிறது. இது, உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 80% ஆகும். மேலும் தமிழகத்தின் மஞ்சள் நகரமான ஈரோடு, நிஜாமாபாத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நமது மாண்புமிகு பிரதமர் அவர்களின் சீரிய தலைமையிலான மத்திய அரசு, நமது ஈரோடு மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை முறைப்படுத்தி, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.