இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்ய இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமகால அரசியல் சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால்
இழைக்கப்படும் இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவும், வலுவான குரல் கொடுத்து அரசியல் தளத்தில் போராடிவரும் சகோதரர் கஜேந்திரகுமார் மீதான இக்கொடுந்தாக்குதல் இலங்கை இனவாத அரசின் கோழைத்தனத்தையும், கோரமுகத்தையுமே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
நெஞ்சில் தீரத்துடனும், நேர்மை அறத்துடனும் சமரசமின்றி தமிழீழ விடுதலைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே ஓங்கி ஒலித்தவரும், தேசியத்தலைவரால் மாமனிதர் என்று போற்றப்பட்டவருமான ஐயா குமார் பொன்னம்பலம் அவர்களைக் கடந்த 2000 ஆம் ஆண்டில் அரசக் கைக்கூலிகள் மூலம் சுட்டுப்படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு.
தற்போது, தந்தையைப் போலவே சமரசமற்ற அரசியல் தலைவராகத் திகழ்கின்ற அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் திரைமறைவில் அழித்தொழிக்கும் இலங்கை இனவெறி அரசின் சதிச்செயலே இக்கொலைமுயற்சி நிகழ்வாகும்.
இலங்கையில் கடும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு, தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பசியும், பட்டினியுமாக வாழ வழியற்று நிற்கும் நிலையிலும், அணுவளவு உரிமையும் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளார்கள் என்பதை உலக வல்லாதிக்க நாடுகள் இப்போதாவது அறிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் எத்தனை ஆட்சி மாறினாலும், எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும், அவர்கள் எத்தனை நல்லெண்ண நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் அவை ஒருபோதும் தமிழர் நலனுக்கு ஒரு சிறிதும் உதவப்போவதில்லை என்பதையும், தமிழரது உரிமைப் போராட்டத்தை
ஒடுக்கும் சிங்களர்களது இனவெறி மனப்பான்மை மாறப்போவதில்லை என்பதையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் மக்களின்
ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கத் துணைநின்ற உலக நாடுகள் இனியாவது உணரத் தளைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.