சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் இருதரப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம் . இந்த நிலையில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் அரிவாள் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவன் தினேஷ் தலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் திருத்தணி அரக்கோணம் கடம்பத்தூர் திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து புறநகர் ரயிலில் தினமும் பயணம் செய்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களிடையே ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவமும் அடிக்கடி நடைபெறும். அடிக்கடி இந்த சம்பவங்கள் நடப்பதால் ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே இன்று ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரி தக்கோளம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தினேஷ் தலையில் பலத்த அரிவாள் வெட்டு பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அரிவாள் வெட்டு காயங்களுடன் கல்லூரி மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் பீட்டர், காளிதாஸ் இருவரையும் அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இரு கல்லூரிகளையும் சேர்ந்த மற்ற 14 மாணவர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மோதல் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.