சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் எங்கு சென்றாலும் தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவரான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா அவர்களிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-
சனாதனம் குறித்து பேசிய உதயநிதி மற்ற மதங்களை பற்றி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பா.ஜ.க.வின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார்.
ஆனால் அவருக்கு கிளம்பிய எதிர்ப்பால் நுபுரை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க.நடவடிக்கை எடுத்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அதை அவர் செய்வில்லை. அதனால் தான் நான் அவரது கழுத்தை வெட்டி வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு என அறிவித்தேன்.
அப்படி கூறிய பின்னரும், அவர் தனது தவறை உணராமல், தன் தலையை சீவ ரூ.10 கோடி தேவையல்ல, 10 ரூபாய் சீப்பு போதுமானது எனக் கிண்டலடித்தார்.
இதனால் 2 தினங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் கொண்ட தர்ம சபையை கூட்டி ஆலோசனை நடத்தினேன். அதன்படி அவர் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாங்களும் எங்கள் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம்.
இல்லையெனில் உதயநிதி எங்கு ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவர் தலையை கொய்ய நான் அறிவித்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளேன்.
உதயநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனில் உதயநிதி வேறு மதத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
அதை செய்யாமல் அவர் சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இது உலகம் முழுவதிலும் அமைதியை குலைக்கும் செயலாக உள்ளது.
அவரைத் தொடர்ந்து ஆ.ராசாவும் இதேபோன்று விமர்சித்தது தவறு. பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சுமார் 120 கோடி பேர் உள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன் சனாதனம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மதங்களும் இல்லை.
இதன் முழு விவரமும் பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக நூலான ரிக் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80 சதவீத மக்களை அழிக்க முயல்வதாகவே அர்த்தம் என்று கூறியுள்ளார்.