நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் உணவகத்தில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த சுஜாதா என்பவரின் 14 வயது மகள் கலையரசி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் உணவகத்திற்குச் சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்தில் கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அனுமதித்துள்ளார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அதே தினத்தில் ஷவர்மா சாப்பிட்ட கலையரசியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல் துறையினர் சம்மந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் நவீன் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.