முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவில் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் குறித்து, அவரது தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த உச்சம்பாறையை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்ற இளைஞர் தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன் அதே நபர் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த முறை முதலமைச்சர் வீட்டிற்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த போதை ஆசாமி இசக்கிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.