நாகூரில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள சிபிசிஎல் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என 7 கிராம மீனவர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணை நிறுவனத்தின் பைப் லைன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திடீரென இரவில் உடைந்தது.
இதன் காரணமாக, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரை கடல் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்த கச்சா எண்ணையின் வீரியம் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 10,க்கும் மேற்பட்ட மீனவர் கிராம மக்களுக்கு கண் எரிச்சல் சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடையே உடைந்த குழாயை அடைக்கும் பணியில் சிபிசிஎல் பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதற்காக மூன்று பொக்லைன் இயந்திரம் மணல் மூட்டைகள் மற்றும் கச்சா எண்ணெயை உறிஞ்சி செல்ல நவீன இயந்திரம் உள்ளிட்டவைகளை நாகூருக்கு கொண்டு வந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கச்சா எண்ணெய் கசிந்த இடத்தை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே காலை மீனவர்கள் வந்து கடற்கரையில் பார்த்த பொழுது அங்கு பைப் லைனில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்தது. இதனால் ஆவேசம் அடைந்த நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பைப் லைனை முற்றிலும் அகற்றக்கோரி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதனிடையே நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் இன்று நாகை தாலுகா மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பட்டினச்சேரி சாமந்தான்பேட்டை நம்பியார் நகர் கீச்சாங்குப்பம் அக்கரைபேட்டை ஆகிய 7, கிராம மீனவ பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,நாகூர் முதல் நாகை வரை எண்ணை படலம் படர்ந்து மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டிய மீனவர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்களுக்கு CPCL நிறுவனத்திடம் இருந்து அரசு நிவாரணம் பெற்று தருவது குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும்,
மக்களை பாதுகாக்க உடைந்த கச்சா எண்ணெய் பைப் லைனை உடனடியாக அடைக்க வேண்டும். சுவாசக் கோளாறு கண் எரிச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்களுக்கு, அரசு முதலுதவி மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் நாகூர் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயை CPCL நிறுவனம் முற்றிலும் அகற்ற வேண்டும் என நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து, தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் சிபிசிஎல் நிர்வாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.