சென்னையில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் (strike) ஈடுபட்டு வருவது பயணிகளை கடும் அவதிக்குள்ளாகியுள்ளது.
அரசு போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துத் துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக, போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு ஆகிய பணிமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பணிமனையிலும் 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கபட இருந்த நிலையில், அரசு அங்கிகரிக்கப்பட ஏஜென்சிகள் ஒப்பந்த்தை கோரலாம் என போக்குவரத்துதுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது திடீரென போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் , சைதாப்பேட்டை , ஆலந்தூர் ஆவடி ஆகிய 32 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகள் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து ஊழியர்கள் தனியார் ஏஜென்சி மூலமாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஆள் சேர்க்கும் முயற்சியை கைடவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.