Selvaperunthagai : சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருப்பதால் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை Selvaperunthagai வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற பாஜகவின் அரசியலுக்கு எதிராக முதலில் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ., தூரத்தையும்,
இரண்டாவது முறை 6,500 கி.மீ. தூரத்தை மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதி பயணத்தையும் ராகுல்காந்தி மேற்கொண்டு நாட்டு மக்களின் அமோக ஆதரவையும், அன்பையும் பெற்றார். இதற்காக தம்மை கடுமையாக வருத்திக் கொண்டு நாட்டு நலன் கருதி இந்த பயணத்தை மேற்கொண்டார்.
மக்களோடு மக்களாக நடந்து, மக்கள் பிரச்சினைகளை அறிந்து, மக்களோடு உரையாடிய ராகுல் காந்தி இண்டியா கூட்டணி சார்பாக நாளை (ஏப்.12) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கு வருகிறார்.
அதேபோல, மாலை 6.00 மணிக்கு கோயம்புத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் இணைந்து பங்கேற்கிறார்.
சமூக நீதிக்காக நீண்ட நெடுங்காலமாக போராடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக விளங்கி வரலாறு படைத்த தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் மண்ணிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ராகுல்காந்தி வருகிறார்.
தமிழக மக்களின் நலனுக்காக தேசியமும், திராவிடமும் தோளோடு தோள் நின்று கைகோர்த்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி அமைத்திருக்கின்றன.
என்னங்க சொல்றீங்க..? தீபாவளிக்கு ரிலீஸாகிறதா விடாமுயற்சி!!
கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடைவதில் வெற்றி காணப் போகிற சரித்திர கூட்டணியாக இண்டியா கூட்டணி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு சமூக நீதியில் அக்கறையில்லாத காரணத்தால் இடஒதுக்கீட்டு அணுகுமுறைக்கு மாறாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனால் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சமூக நீதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 30 நீதிபதிகள் உயர்சாதியை சார்ந்தவர்கள்.
பட்டியலினத்தைச் சார்ந்த ஒருவரும், பின்தங்கிய சமுதாயத்தை சார்ந்த ஒருவரும் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த ஒரு கிறிஸ்துவரும், ஒரு இஸ்லாமியரும் நீதிபதிகளாக உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு பாஜக ஆட்சியில் ஆபத்து ஏற்படுகிறபோது நாட்டு மக்களை பாதுகாக்கின்ற ஒரே அமைப்பாக உச்ச நீதிமன்றம்தான் இருக்கிறது.
அதிலும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உரிய பிரிதிநிதித்துவம் இல்லையென்று சொன்னால் சமூகநீதிக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.
11 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர் பணிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 2.5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.டி. பிரிவினருக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 8 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
கடந்த 2017ம் ஆண்டில் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவிகித இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.
இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரம் இடங்கள் பறிபோனதோடு, அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதிநிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய குடிமைப் பணிகளில் நேரடியாக எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்; இதில் பிற பின்தங்கிய வகுப்பினர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்,
பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 15.92 சதவிகிதமும், எஸ்சி பிரிவினருக்கு 7.65 சதவிகிதமும், எஸ்டி பிரிவினருக்கு 3.80 சதவிகிதமும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தக் குறைவான பிரதிநிதித்துவம் சாதி அடிப்படையிலான மோசமான பாகுபாட்டைக் காட்டுகிறது. இந்தப் பாகுபாடு அவர்களை சமுதாயத்தில் உயர்வதைத் தடுக்கிறது.
பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கான உரிமையை வழங்காவிட்டால் சமூக நீதிக் கனவு நிறைவேறாது. அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.
இதற்கு ஒரே தீர்வு ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜக அரசு இருப்பதால்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள்.
சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.
சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கிற தமிழகத்தில் பாஜகவும், சமூக நீதியைப் பற்றி அதிகமாக பேசுகிற பாமகவும் கூட்டு சேர்ந்திருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழகத்தில் பாமக நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பில் உண்மையிலேயே கடுகளவாவது அக்கறை இருக்குமேயானால் அதனை ஏற்றுக் கொள்கிற வகையில் பிரதமர் உரையின் மூலமாகவோ, தேர்தல் அறிக்கையிலோ உறுதிமொழி பெறுகிற நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பாரா?.
அப்படி எடுக்கப்படவில்லையெனில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கிற, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிற பாஜகவோடு சேர்ந்து சமூகநீதிக்கு துரோகம் இழைத்ததாகவே ராமதாஸ் கருதப்படுவார்.
2024 தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிறபோது, சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து,
சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்” என்று Selvaperunthagai தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மதுபான கொள்கை வழக்கு – கவிதாவை சிபிஐ கைது செய்தது