ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் கட்சியினர், சந்திரபாபு நாயுடுவையும் அவரது குடும்பத்தையும், அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனால் சட்டமன்றத்தில் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு, தான் வெற்றி பெற்று முதல்வரான பிறகே சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என்றும் அதுவரை சட்டமன்றத்திற்குள் நுழையப்போவதில்லை என கூறிவிட்டு வெளியேறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேச முயற்சித்தபோது கதறி அழுதார். முன்னாள் முதல்வர் அழுத காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.