இந்தியா முழுமைக்கும் மட்டுமின்றி, உலகம் போற்றும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் பெருஉயரத்தை எட்டி, தமிழ்ப்பேரினத்தின் மற்றுமொரு பெருமைமிகு அறிவியல் அடையாளமாக உயர்ந்துள்ள சோம்நாத் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் ஆகியோருக்கு சீமான்(Seeman) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO) சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம்,பல சவால்களைக் கடந்து நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதன் மூலம், நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுப் பெருமையை இந்திய ஒன்றியத்திற்குப் பெற்றுத்தந்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா சோமநாத் அவர்களுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவமிக்க விண்வெளி ஆராய்ச்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ப.வீரமுத்துவேல் அவர்களுக்கும், ஏனைய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நல் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய ஏவுகணை நாயகன் ஐயா அப்துல் கலாம், சந்திராயன்-1 மற்றும் மங்கள்யான் திட்ட இயக்குநர் ஐயா மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் ஐயா சிவன் அவர்கள், சந்திராயன்-2 திட்ட இயக்குநர் அம்மையார் முத்தையா வனிதா அவர்கள், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் ஐயா வீரமுத்துவேல் அவர்கள் என இந்திய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மைப்பங்கு வகித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது உலகெங்கும் பரவிவாழும் தமிழர்கள் அனைவரும் பெருமிதமும் பேருவகையும் கொள்ளத்தக்க வரலாற்றுப் பேருண்மையாகும்.
அந்தவகையில், இந்திய ஒன்றியம் முழுமைக்கும் மட்டுமின்றி, பார் போற்றும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் பெருஉயரத்தை எட்டி, தமிழ்ப்பேரினத்தின் மற்றுமொரு பெருமைமிகு அறிவியல் அடையாளமாக உயர்ந்துள்ள ஐயா ப.வீரமுத்துவேல் அவர்கள், மேன்மேலும் பற்பல சாதனைகளைப் புரிந்து, தமிழிளம் தலைமுறையினருக்கு நல் வழிகாட்டும் முன்னத்தி ஏராகத் திகழவேண்டுமென விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.