சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சித்தோடு அருகே தீ பிடித்து எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
இந்நிலையில், மீதமிருந்த 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திகேயன், பேருந்தை உடனடியாக அங்கேயே சாலையோரமாக நிறுத்திய தோடு, பெருந்திற்கு உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவர்களை வெளியேற்றியுள்ளார்.
ஓட்டுனரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் விபத்துக்குள்ளான பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு காவல் துறையினர், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.