செப். 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை சென்னை-திருப்பதி விரைவு ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
“சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரேனிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
இதில் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில் (எண்.16057) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரெயில் (எண்.16053) மற்றும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரெயில் (எண்.16203) 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரெயில் (எண்.16204), காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (16054) மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில் (எண்.16058) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.