பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல், நவின், அருண்குமார் ஆகிய மூன்று பேரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் நேற்று வில்லிவாக்கம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வில்லிவாக்கத்தில் இருந்து பெசன்ட்நகர் செல்லும் பேருந்தும், மூவரும் பயணித்த இரு சக்கர வாகனமும் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் மூவரும் பேருந்து ஓட்டுனர் மணிவண்ணன் என்பவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள், பேருந்து முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதபடுத்தி, பேருந்து ஓட்டுநரை தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மணிவண்ணன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஒட்டுனரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் சாமுவேல், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தப்பி ஒடிய கல்லூரி மாணவன் நவின் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.