தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வந்தார்.
அப்போது உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வரின் அந்த பயணத்தில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் உடன் தமிழக அரசு 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
இதன் மூலம் மூவாயிரத்து 494 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் 94 ஆயிரத்து 975 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.