தமிழகத்தில் சினிமா என்பது அரசியலிலும் சமூகத்திலும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை நொளம்பூர் ரோட்டரி கிளப் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் நொளம்பூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 800 பேர் கலந்துகொண்டு மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்;
ஒரு நாளில் மட்டும் செய்துவிட்டு முடிக்கும் பணி அல்ல, தூய்மை பணிகள் என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகும்.
அரசுக்கு மட்டும் தான் பொறப்பு என்று எண்ணாமல் நாம் ஒவ்வொருவரும் நமது பொறுப்பாக ஏற்று குப்பைகளை அகற்றி சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன்;
நம் ஒவ்வொருவரும் தன்னுடைய பொறுப்பாக ஏற்று தூய்மை பணிகளை மேற்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் சினிமா என்பது அரசியலிலும் சமூகத்திலும் தாக்குதலை ஏற்படுத்தி கொண்டுதான் வருகிறது.
சமூகத்தில் நல்ல உரையாடல்களை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக ஜெய் பீம் போன்ற திரைப்படம் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகத்தில் சினிமாவின் மூலம் நல்ல விவாதங்கள் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்கான பணிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் என் எண்ணம்.
அனைவருக்கும் அரசியலில் வர உரிமை உள்ளது. ஆனால் அதற்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றுதான். அந்த சவால்களை எதிர்கொள்ளும் மன பக்குவம் உள்ளவர்கள் தான் அரசியலில் நுழைய விரும்புகிறார்கள் என்றார்.