சென்னையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்று வரக்கூடிய மருத்துவ முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
200 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகள் சார்பாக 200 முகாம்களும் சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 200 முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவருக்கும் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் உயர் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற நபர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த மருத்துவ முகாம் என்பது அடுத்து வரக்கூடிய ஒருசில நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பரிசோதனைகளுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
சித்த மருத்துவத்துறையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்த முதல்வர் பிறகு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தற்போது ஆழ்வார்பேட்டையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் அடுத்து ரத்னா நகர் பகுதியில் உள்ள மருத்துவ முகாமை தொடங்கி வைக்கவுள்ளார்.