சென்னையில் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் (MKStalin) 9 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில்
டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (Japan External Trade Organisation – JETRO) தலைவர் திரு. இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணைத் தலைவர் திரு. கசுயா நகஜோ அவர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டும் என்று முக ஸ்டாலின் (MKStalin) கேட்டுக் கொண்டார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடனான மதிய உணவு சந்திப்பு நிகழ்ச்சியில் முக ஸ்டாலின் (MKStalin) கலந்து கொண்டு உரையாடினார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் கலந்துகொண்டு, ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
பின்னர் டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர்முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.