காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து கனடா வீராங்கனையை வீழ்த்தி முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனை மிச்செல் லியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
கடைசி நாளான இன்று இந்தியாவிற்கு சில பதக்கங்கள், அதுவும் தங்கமாக கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆடும் பெரும்பாலான போட்டிகள் இறுதிப்போட்டிகள் என்பதால் தங்கத்திற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
அந்த வகையில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லியை எதிர்கொண்டு விளையாடினார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முதல் செட்டின் 10 புள்ளிகளுக்கு பிறகு லி மீது சிந்து ஆதிக்கம் செலுத்தி ஆடி புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை 21-15 என வென்ற பி.வி.சிந்து, 2வது செட்டையும் வென்று, 2-0 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் பி.வி.சிந்து வென்றார் .
காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவின் 56-வது பதக்கம் ஆகும். மேலும் பி.வி.சிந்து தனது முதல் தங்க பதக்கத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.