அருந்ததியர் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சீமான் ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மாலதி முன் ஆஜராகியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
காவல் துறையினர் அனுப்பிய அந்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மாலதி முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகியுள்ளார்.