கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயை அகற்றாத, CPCL ஆலையை வரும் 8,ம் தேதி முற்றுகையிட நாகை தாலுகா மீனவர்கள் முடிவு செய்யப்பட்டு நாகூரில் நடைபெற்ற 7, கிராம மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது.
மேலும் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த மூன்று நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே குழாயின் ஓட்டையை சீரமைத்ததாக சிபிசிஎல் நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் அதனை இன்று ஏழு டன் அழுத்தத்துடன் பம்பிங் செய்து பார்த்தபோது மீண்டும் கச்சா எண்ணெய் பீறிட்டு கடலில் வெளியேறியது.
இதனால் அதிருப்தி அடைந்த நாகை தாலுகா மீனவர்கள் இன்று நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை, நாகூர், நம்பியார்நகர் சாமந்தான்பேட்டை, கல்லார் உள்ளிட்ட ஏழு கிராம மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது நாகூரில் உடைந்த கச்சா எண்ணெய் குழாயை முறையாக சீரமைக்காத சிபிசிஎல் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நாகை தாலுகா மீனவர்கள், கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயை முற்றிலும் அகற்றக்கோரி, பனங்குடியில் உள்ள சிபிசிஎல் ஆலையை வரும் 8,ம் தேதி 7, கிராம மீனவர்கள் சேர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என ஏகமானதாக முடிவெடுத்தனர்.
இதனிடையே நாகூரில் உள்ள கச்சா எண்ணெய் குழாயை சிபிசிஎல் ஆலை நிர்வாகம் அகற்றும் வரை பட்டினச்சேரி மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர.