Death of medical students : கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச்சென்று உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
“கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது,
கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியைச் சேர்ந்த காயத்திரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (வயது 23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (வயது 23),
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.சாருகவி (வயது 23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 24) ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் (Death of medical students) என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும்,
தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு,
காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு