மயிலாடுதுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., ஆகியோர் குறைகளை கேட்டறிந்து வருகின்ற ஹோலி பண்டிகை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கு வங்காளம், பீகார், உத்ரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் மேற்கு வங்காளம், பீகார், உத்ரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிரந்தர கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்துக்கு இன்று நேரில் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு விருந்தோம்பலில் சிறந்த மாநிலம். இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
அப்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருப்பின் உதவி எண் 0421 – 2203313 , 9498101300 , 9498101320 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வருகின்ற ஹோலி பண்டிகை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார்.