தீபாவளி போனஸ் வழங்குவதில், ஒரு கண்ணில் சுண்ணாம்பு; மறு கண்ணில் வெண்ணெய் வைக்கும் விடியா திமுக அரசு என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது..
“எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை தமிழ் நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் (கூட்டுறவுத் துறை மற்றும் வனத் துறை உட்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெய்யுமாக இந்த விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆட்சிக்கு வந்த நாள்முதல் கூட்டுக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த விடியா திமுக ஆட்சியாளர்கள், வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியது போல், 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.