அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொனர்வு வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து, அமலாக்கதுறை காவல் எப்போது என்பது தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி நிஷா பானு பிறப்பித்த உத்தரவுகள் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளன.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா உடனடியாக ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
இதனால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையின் முடிவில், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை உறுதி செய்தார். அத்தீர்ப்பில், “அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட, அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை.
எனவே, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியின் கைது சட்டப்பூர்வமானது. அவரை நீதிமன்றக் காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது, அவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன்.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போது முதல் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவெடுக்கும் என அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு எத்தனை நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளிப்பது, செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்ப்போடு விசாரணை தொடங்கியது.
நிஷா பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்க, ஐகோர்ட் மதுரை கிளையில் இருந்தபடி, நீதிபதி பரத சக்கரவர்த்தி காணொளிக் காட்சி வாயிலாக விசாரணையில் பங்கேற்றுள்ளார். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகினர்.
செந்தில் பாலாஜி தரப்பில், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை வைத்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைக்க உள்ளோம், எனவே, வழக்கை மற்றொரு நாள் தள்ளி வைக்க வேண்டும்” என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டார்.
எப்போது விசாரணை தேதி என்பது குறித்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். மற்றபடி வாதிட ஏதுமில்லை என துஷார் மேத்தா குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக இவ்வழக்கு தொடர்பான உத்தரவை நீதிபதி நிஷா பானு அறிவித்தார். அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என்றும், வழக்கில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் எனக் கூறிய நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரிக்குப் பின்னான மருத்துவக் கண்காணிப்பு முடிந்து, தற்போது புழல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.