தோள்பட்டையில் மனுக்கள் தாங்கி சாலை அளக்கும் கருவியுடன் வந்த அதிமுக பெண் மாமன்ற உறுப்பினரால் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அமைந்துள்ள பெரியார் அரங்கில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென முழக்கத்தை எழுப்பினர். தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை மேயர் முன்வைத்தனர். இதனை பரிசீலனை செய்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுமென மேயர் தெரிவித்தார்.
மதுரை வார்டு 20வது பகுதியைச் சேர்ந்த நாகஜோதி சித்தன் தனது வார்டு பகுதியில் அடிப்படை பிரச்னை சீர் செய்யக் கோரி தோள்பட்டையில் மனுக்கள் அணிந்தவாறு வந்து கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரிடம் வழங்கி பலமுறை மனு அளித்து நடவடிக்கை இல்லை எனக் கூறினார்.
மேலும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு சாலை அமைக்கப்படதாததால் சாலை அளக்கும் கருவியை எடுத்து வந்திருந்தார். இதனையடுத்து உங்களுக்கு மன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுமென கூறியவுடன் ஆணையர் மேயர் அமர்ந்த மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
தோள்பட்டையில் மனுக்கள் தாங்கி சாலை அளக்கும் கருவியுடன் அதிமுக பெண் மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக திமுக கூட்டணி முழக்கமிட்டபோது அதிமுகவினர் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தனர்.