அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ள நிலையில், பொதுக்குழுவிற்கு அனுமதியளிக்கக்கூடாது என மாவட்ட காவல் ஆணையாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் மேலும் புயலை கிளப்பியுள்ளது.
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஒருவாரமாக நீடித்துவருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இந்த கோஷத்தை தொடங்கிவைத்தாலும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினருக்கு ஒற்றைத் தலைமை கோஷத்தில் உடன்பாடு இல்லை.
இதனால் கடந்த சில நாட்களாகவே ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணியினருக்கிடையே கீரி-பாம்பு சண்டை போல முற்றியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பொதுக்குழுவிற்கான தீர்மானம் ஏற்பாடு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தின்போது, ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு வாயில் ரத்தம் சொட்ட காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், பொதுக்குழுவில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது என கூறி ஓபிஎஸ் காவல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையாளருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மன்றம் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மா – கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.
இருப்பினும், அனைத்திந்திய அண்ணா திராவிடம் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.
கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் மாவட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.
கேள்வி கேட்ட உடன்பிறப்புகள்:
இந்தத் தகவலை அறிந்த கழக உடன் பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும், இதுபோன்ற தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும், இதே மண்டபத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும், எனவே ‘இடமில்லை’ என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தீர்மானங்கள் இல்லாமல் பொதுக்குழு பொருத்தமல்ல:
மேலும் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமா இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் (Agenda) நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விரும்பத்தகாத சம்பவங்கள்:
18-06-2022 அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தேன்.
விதிகளுக்கு எதிராக செயல்பட்ட மாவட்ட செயலாளர்:
தற்போதுள்ள அசாதாரண சூழலில்அமைதி காப்பது அவசியம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி 23-06-2022 அன்று நடைபெறவுள்ள பொதுக் குழு மற்றும் செயற் குழுக் கூட்டத்தினை வைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை 19-06-2022 அன்று கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும், இணை ஒருங்கிணைப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கழக சட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பா. பென்ஜமின் அவர்கள் செயற்குழு மற்றும் பொதுக் குழுவிற்கு பாதுகாப்பு கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கழக சட்ட விதிகள் படி, சட்ட நடவடிக்கை எடுக்க கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.
மேலும், 23-06-2022 அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் குழுக் கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவிற்கு அனுமதி மறுக்க வேண்டும்:
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், திரு. பா. பென்ஜமின் அவர்கள் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.