அரசியலில் அமைச்சராக உயர்வதற்கு காரணம் துர்கா ஸ்டாலின் தான் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கிராம சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிலையில்,மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
அப்போது கிராம மக்களிடையே பேசிய அவர்,இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இரண்டாவதாக ஆலங்குடியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் கொடுத்தார்.
அதற்கு முழு காரணம் அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள் தான். மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்து அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமாணவர் துர்கா ஸ்டாலின்.இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.