நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது.
அதையடுத்து, சென்னை அணியின் கேப்டன் ‘கூல்’ தோனி (ms dhoni) பேட்டியளித்தார். அப்போது,
தோனியிடம் கடந்தமுறை நீங்கள் தோல்வி அடைந்த போது சிஎஸ்கே என்ற பெரிய பாரம்பரிய அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்கிறீர்களா என்று கேட்கப்பட்ட போது,
“நான் இன்னும் செல்லவில்லை, இங்குதான் இருக்கிறேன்” என்று கூறினீர்கள். இப்போது கோப்பையை வென்ற பிறகு ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
தொகுப்பாளர் கேட்ட அந்த கேள்விக்கு தோனி பதிலளித்தபோது மைதானமே ‘தோனி, தோனி’ என்ற முழக்கத்தில் மூழ்கியது.
தொடந்து பேசிய மகேந்திர சிங் தோனி “என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நான் திருப்பி அளிக்கும் பரிசு, அவர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவதுதான்,“ என்று தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்தார்.
முன்னதாக, 42 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில்,
தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு தனது ரசிகர்களுக்கு மற்றொரு சீசனில் விளையாடி “பரிசு” கொடுக்க விரும்புவதாகவே நேற்றைய போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போதுள்ள சூழலில் என் ஓய்வை அறிவிக்க இது சரியான நேரம் தான். ஆனால், என் மீது ரசிகர்கள் காட்டிய அன்புக்காக நான் ஏதாவது ஒன்றை திருப்பித் தரவேண்டும். இந்த தருணத்தில் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லி விடைபெறுவது எளிமை தான்.
ஆனால், என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்காக இன்னும் 9 மாதங்கள் கடினமாக உழைத்து இன்னும் ஒரு சீசன் விளையாட நினைக்கிறேன்.
அடுத்த ஆறு, ஏழு மாதங்கள் என் உடல் ஒத்துழைப்பதை பொறுத்து நான் அடுத்த சீசனிலும் விளையாட விரும்புகிறேன். அதற்காக நான் தயாராக வேண்டும்” என்று கூறினார்.
அதை தொடர்ந்து, கடைசியாக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியின் போது ஏன் உணர்ச்சிவசப்பட்டீர்கள்? என்று தோனியிடம் கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர்.
அதற்கு பதில் அளித்த தோனி “சில நேரங்களில் அனைவருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படுவது இயல்பு தான். கடந்த போட்டியின்போது நான் விளையாட மைதானத்திற்குள் நுழைந்த போது மொத்த மைதானமும் என்னுடைய பெயரை உச்சரித்த போது என்னுடைய கண்களில் கண்ணீர் நிரம்பியது.
அதனால், சிறிது நேரம் டக் அவுட்டில் நின்று அதை அனுபவித்த பிறகு தான் நான் விளையாட வந்தேன். அந்த வகையில், எனக்கு எப்போதும் சென்னை மைதானம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது,“ என்று பதிலளித்தார்.