திமுக- அரசின் முக்கிய திட்டமாகக் கருதப்படும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு கூட்டணி கட்சிகள், மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக, ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவில், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 6 மாத காலம் நாள்தோறும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கற்பித்தல் திறன் பாதித்துள்ள மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதுகிறார். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மரக்காணத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. புதிய கல்வி கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் திட்டமாக இது அமைந்திருப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.முஹம்மது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடக் கட்சியின் தலைவர் கி.வீரமணி;
ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை மறைமுகமாக திணிப்பதாக இருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர், எம்.எஸ். முஹம்மது தெரிவித்துள்ளாதவது;
“மாணவர்கள் கல்வி கற்பதற்காக அந்தந்த பகுதிகளை சார்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு புதிய கல்வி கொள்கையின் இன்னொரு முகமாகவே இருக்கிறது. அதே சமயம், அந்த தன்னார்வலர்களுக்கான தகுதி என்ன அவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்பதை பற்றி எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவரை தேர்வு செய்து, மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க நியமிப்பதின் மூலம் சில சமூக விரோத குரூர எண்ணம் கொண்டவர்கள் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது.” என்றார்.
மேலும் இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்,
“இல்லம் தேடி கல்வி திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் ஷாகாக்கள் நடத்தும் ‘சங் பரிவார்’ கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கு நிலை ஏற்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.