ஈரோடு தேர்தல் (erode election,) தோல்வி பயத்தில் அ.தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தக்கர் சாலை பகுதியில் 10ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள 3.35 லட்சம்சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டியைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத்
திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பஞ்சவர்ண சாமி கோயில் தெருவில் 19லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,
ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறும்.அ.தி.மு.க தேர்தல் தோல்வி பயத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.
திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலத்தில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து தார் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்து இன்னும் ஓரிரு நாளில் பாலம் திறக்கப்படும்.
குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஒரு சில அசௌகரியங்கள் வரும் ஆனால் நீண்ட கால தீர்வுக்கு அது தான் வழி.பொதுமக்கள் சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 24மணி நேரம் குடிநீர் வழங்குவதற்கும், பாதாளச் சாக்கடை திட்டமும், சாலை வசதிகளும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பது இல்லை. கோவை, சேலம், சங்கரன்கோவில், நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் பெருநகர் ஆய்வுப் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மாநகரத்தந்தை அன்பழகன், மாவட்ட ஆட்சியில் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.