நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டது.
ரெயில்வேயும் பயணிகளின் சேவையை முழுமையாக ரத்து செய்தது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு ரெயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு குறுகிய தூர ரெயில்களும் இயக்கப்பட்டது.
ஆனால் அனைத்து ரெயில்களையும் சிறப்பு ரெயில்கள் அடிப்படையிலேயே ரெயில்வே துறை இயக்கியது. இதனால் ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிறப்பு ரெயில் நடைமுறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டல ரெயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரெயில்களும் சிறப்பு ரெயில்களாகவும், விடுமுறை கால சிறப்பு ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரெயில்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. ரெயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் இயக்குனர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இருந்து பழைய கட்டண நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து ரெயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது:-
பழைய கட்டண நடைமுறையில் ரெயில்களை இயக்க ரெயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு ரெயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளது, என அவர் கூறினார்.