காப்பீடு தொகைக்காக மகன் தந்தையை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மோகாம் சிங் தனது பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தார்.இந்நிலையில், அவர் கோசியா என்ற பகுதியில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விபத்தில் உயிரிழந்தார் என போலீஸார் நினைத்தனர். ஆனால் மோகாம் சிங் உடல் இருந்த கோசியா பகுதியிலேயே அவரது மகன் ராஜேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர்.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. தந்தை மோகாம் சிங் ரூ.4 லட்சத்திற்கு காப்பீட்டுத் தொகை முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தைப் பெறுதற்காக நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய மகன் திட்டம் போட்டுள்ளார்.
பின்னர் அவரை கோசியா பகுதியில் கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்ததுபோல் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்களை போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.