‘அன் ஒமிக்ரான் வேரியண்ட்’ என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் கூறி வரும் நிலையில், இதுகுறித்து உண்மை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு…
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா உலகில் பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. இது வீரியமிக்கது என்றும், பன்மடங்கு பெருகும் சக்தி கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
நமது நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இங்கும் வேகமாக பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது, நெட்டிசன்கள் ‘Contagian’ என்ற திரைப்படத்தை கண்டுபிடித்தனர். உயிரைக் கொல்லும் வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள் குழு போராடும் கதையான அது, கொரோனாவுக்கு தொடர்புடையதாக இருந்ததால், அந்தப் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், ஒமிக்ரான் பீதியை கிளப்பும் இந்த நேரத்தில், 1963 ஆம் ஆண்டே ‘தி ஓமிக்ரான் வேரியன்ட்’ என்ற பெயரில் இத்தாலியில் திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் ஒரு போஸ்டரை தோண்டி எடுத்துள்ளனர்.
’பூமி கல்லறையாக மாறிய நாள்’ என்ற அந்தப் படத்தின் கேப்ஷன்தான் அதிரடி ஷாக் கொடுக்கிறது. இந்த போஸ்டரை, இயக்குநர் ராம் கோபால் வர்மா உட்பட பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Believe it or faint ..This film came In 1963 ..Check the tagline 😳😳😳 pic.twitter.com/ntwCEcPMnN
— Ram Gopal Varma (@RGVzoomin) December 2, 2021
சிலர் இதை ஃபேக் போஸ்டர், போட்டோஷாப் வேலை என்று கூறினாலும் படத்தின் கதையையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது, வேற்றுக்கிரவாசி ஒருவர், பூமியில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிந்துகொள்ள, மனித உடலை எடுத்துச் செல்வதான கதையை கொண்டது என்றும் உகோ கிரேகோரெட்டி (Ugo Gregoretti) இயக்கிய இந்தப் படத்தில் ரெனோடா சல்வதோரி, ரோஸ்மேரி டெக்ஸ்டர் உட்பட பலர் நடித்ததாகவும் சில நெட்டிசன்கள் ஆதாரம் தருகின்றனர்.
ஆனால், பெக்கி சீட்டில் என்பவர் மூன்று படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ’70-களின் அறிவியல் புனைகதை போஸ்டர்களில் ‘தி ஓமிக்ரான் மாறுபாடு’ என்ற சொற்றொடரை நான் போட்டோஷாப் செய்தேன் #Omicron” என்று குறிப்பிட்டுள்ளார். ‘அப்போ இது பொய்யா குமாரு?’ என்று கதை கட்டியவர்கள் நோஸ் கட் அடைந்துள்ளனர்.
https://twitter.com/BeckyCheatle/status/1464866651678117892?s=20
சமூக வலைதளவாசிகள் பலர், இந்த பொய்யான போஸ்டர்களை நம்பி, 1960 களில் ‘தி ஓமிக்ரான் வேரியன்ட்’ என்ற பெயரில் படம் வந்ததாகவும் ஓமிக்ரான் மாறுபாட்டை அப்போதே கணித்து படம் எடுத்துவிட்டதாகவும் கூறிவருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.