மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக துர்காதேவி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து காமராஜரிடம் இருந்து 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட காமராஜ் கேட்டபோது தொடர்ந்து துர்கா தேவி அழைகழித்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் இன்று திருக்கடையூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தனது மனைவி தாமரைச்செல்வி, மற்றும் தாய் சுகுணா ஆகியோருடன் தீக்குளிக்க முயன்றுள்ளார் . தொடர்ந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது அருகிலிருந்தவர்கள் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது