நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் சந்தித்துக் கொண்ட ஆளுநரும் முதல்வரும் முகமலர்ச்சியுடன் கைகொடுத்து சிரித்து பேசிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும்அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர்.இந்த நிகழ்வில் நேரில் சந்தித்துக் கொண்ட ஆளுநரும் முதல்வரும் அப்போது முகமலர்ச்சியுடன் கைகொடுத்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், காந்தியின் பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வரும் ஆளுநரும் பக்கத்தில் அமர்ந்த சிரித்து பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.