தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகவரித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் 400பணியாளர்களை பணியிடமாற்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில் காரணமின்றி பணியிட மாறுதல்களை அறிவித்தாக கூறி பணியிடமாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும் என வணிகவரி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கோரிக்கை விடுத்த வணிகவரி பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க துணைத்தலைவருமான ஜெயராஜராஜேஸ்வரன் என்பவரை பழிவாங்கும் நோக்கோடு மதுரையிலிருந்து திருச்சிக்கு பணியிடமாறுதல் செய்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியை கண்டித்தும், வணிகவரித்துறையின் கீழ் செய்யப்பட்ட பணியிடமாறுதல்களை திரும்ப பெற கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வணிகவரித்துறை அமைச்சருக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். சில நாட்களுக்கு முன்பாக வணிகவரித்துறையில் அமைச்சர் மூர்த்தி் பணம்பெற்றுக்கொண்டு இடமாறுதல்கள் வழங்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் தற்போது அமைச்சருக்கு எதிராக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் திருமதி.தமிழ்செல்வி பேசியபோது:
வணிகவரித்துறை அமைச்சர் பணியாளர்கள் மீதான பழிவாங்கும் நோக்கை கைவிட வேண்டும், பணியிடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதில் முதலமைச்சர் தலையிட்டு முடிவு எட்டப்படவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.