தமிழக ஆளுநர் ரவி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் (P. Chidambaram) கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 10 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி உத்தரவை பிறப்பித்தது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை உச்சநீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், அரசியல் சாசனத்தின் 200 ஆவது பிரிவின் கீழ் மசோதா மீதான ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைக்க முடிவு செய்தால், அதனை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் அவ்வாறு செயல்படவில்லை என்றால், சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக ஆளுநர் இருப்பதால், மாநில சட்டமன்றங்களால் சட்டம் இயற்றும் வழக்கமான போக்கை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நடைமுறையில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, அது அவசியம் என நினைத்தால், திறமையான மூத்த வழக்கறிஞரை அழைத்து தீர்ப்பை விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.