சேப்பாக்கம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை அரசு ஏற்கவில்லை என கூறியிருந்தார். எனவே உதயநிதி வேட்புமனு ஏற்றதை செல்லாது எனவும், அதன்மூலம் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது எனவும் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
பிரேமலதா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன் மீதான வழக்கு விவரங்களை மறைக்கவில்லை என்றும், அதனால்தான் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம் தனது வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்ததாக குறிப்பிட்டிருந்தார். எனவே பிரேமலதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி பாரதிதாசன், தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு வராத நிலையிலும் 22 வழக்குகள் பற்றிய விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும், தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, உதயநிதியின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பளித்தார்.