தஞ்சையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாரில் (illegal bars) மது வாங்கி குடித்த இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில், அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வரும் நிலையில், அதற்கு எதிரே உள்ள பாரில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், குப்புசாமி மற்றும் விகேன் ஆகிய இருவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பார்களை (illegal bars) மூடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
அதனையடுத்து, அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு பாரும் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை சோதனையிட்ட அதிகாரிகள் அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 18 பார்களை கண்டறிந்து சீல் வைத்தனர்.