மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த இதை செய்வோம்.. – அமைச்சர் மனோ தங்கராஜ்

Spread the love

தகவல் தொழில்நுட்பத்தை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்திற்கான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்,கடந்த 6 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், முதலமைச்சரின் ஆலோசனையின் படி, வருங்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைப்பெற உள்ளது என்றும் கூறினார்.

மேலும், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந்த முயற்சி என கூறிய அவர், நாட்டிலேயே முன்னணி துறையாக இந்த துறையை மாற்ற இந்த குழு அச்சாணியாக அமையும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

TNEGA மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, ELCOT மூலம் முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும், முறையாக வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவிற்கு பின் தகவல் தொழில்நுட்பத்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த 4-5 மாதங்களில் அனைத்து தரப்பினருடனும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றும், விரைவில் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.


Spread the love
Related Posts