எங்களின் வெற்றியிலும், கடினமான காலத்திலும் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் எங்களுக்கு கிடைத்த ரசிகர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றும் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இம்முறை முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,
ரசிகர்களைப் பற்றி அதிகமாக சொல்லத் தேவையில்லை. எங்களின் வெற்றியிலும், கடினமான காலத்திலும் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு கிடைத்த ரசிகர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எப்போதும் அணி வீரர்களை தாழ்மையுடன் இருக்கச் சொல்வேன். மேலும் நான் அணியின் ஒரு ரசிகனாக உணர்கிறேன். அவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் பார்வையையும் வீரர்கள் மதிக்க வேண்டும்” என்று கூறினார்