தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல எனவும், வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :
பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்றபடி வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை.
வன்முறைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால் எதுவுமே அரசாங்கத்துக்கு தொடர்புள்ளது கிடையாது. அனைத்தும் முன்விரோதம் காரணமாக நடப்பவை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற அளவுக்கு எந்த வன்முறைச் சம்பவங்களும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கூடும், குறையும். ஆனால், அரசாங்கம் இதற்கு எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது.
முன்னாள் குற்றவாளிகளை அரசு அடையாளம் கண்டு கட்டுப்படுத்துகிறது. ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் வருகிறார்கள். அவர்களை என்ன செய்வது?. அச்சுறுத்தல் இருப்பதாக அரசியல் தலைவர்கள் சொன்னால் அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் யாரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.