கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ராமன் கோவில், மகளிர் ஒதுக்கீடு போன்றவைகளை கொண்டுபாஜக திசை திரும்புவதாக திராவிட கழக தலைவர் கீ வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இருமுறை ஆட்சியிலும் பொய்யான வாக்குறுதிகள்:
பா.ஜ.க. அரசியலில் கொஞ்சம் காலம் தனியே நின்று படுதோல்வி அடைந்து, பிறகு கூட்டணி தயவில் 23 நாள் ஆட்சி முதல் இன்றுவரை பல அவதாரங்கள், ‘உத்திகளை, வித்தை’களைக் காட்டி வந்தது ஆர்.எஸ்.எஸ். அதன்மீதான தடையின்காரணமாக (1914 முதல்) சிறையில் இருந்தபோது, அதன் தலைவர் அன்றைய பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பட்டேல் போன்றவர்களிடம் அடங்கி ஒடுங்கி, தங்களது செயலில் மாற்றம் உருவாக்கும் உறுதிமொழிக் கடிதங்கள் எழுதுவது – பிறகு வழமைபோல ரகசிய முறையில் வன்முறைகளைக் கையாண்டு, பல வித யுக்திகளை மேற்கொள்வது அதன் வழமையான குணாம்சம்! கடந்த இரண்டு முறையும் ‘வளர்ச்சி’ போன்ற பொய்யை, ‘வளப்படுத்துதல்’ போன்ற பொய்யுரைகளைக் கூறி, இளைஞர்களுக்கு வாக்குறுதித் தேனை வாயில் தடவி, எப்படியோ ஆட்சியைப் பிடித்து, தங்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு, ‘‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்‘’ என்று அரசியல் களத்தில் பா.ஜ.க.வினர் ஆட்டம் நடத்துகின்றனர்.
இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள்:
கடந்த முறை இவர்களைப் புரிந்துகொள்ளாத வாக்காளர்கள், இம்முறை சாமான்ய மக்கள் படும் துயரம்மூலமாக – ‘‘படமுடியாதினி துயரம் பட்டதெல்லாம் போதும்‘’ என்று முடிவுக்கு வந்து தேர்தல் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
அதை நன்கு புரிந்துகொண்டனர் – தங்களது பழைய வித்தைகள், சொத்தைகள் ஆகிவிட்டன! பிரதமர் மோடி, அமித்ஷா என்ற முகங்கள் வாக்குகளை வாங்கித் தராது என்பதை தெற்கே கருநாடக மாநிலத்திலும், வடக்கே இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் புரிந்துகொண்டனர்.
இராமர் கோவில் கட்டினால் விலைவாசி குறையுமா? மக்கள் கேள்வி :
இராமர் கோவிலை இவர்கள் கட்டினால், உழைக்கும் மக்கள் ‘‘எங்களுக்கு ‘ரொட்டி எங்கே?’ வேலை எங்கே? விலைவாசி விண்ணை முட்டுகிறதே – மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதும், மனித உயிர்கள் பலியும், பசுப் பாதுகாவலர்களின் அட்டகாசமும்தானே மிச்சம்?’’ என்று உணர்ந்து வரும் நிலை வந்துவிட்டதால், தங்களது ஒப்பனையை மாற்றி, திடீரென்று ஒடுக்கப்பட்டோர் சமூகநீதிபற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது பழைய எதிர்ப்பை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில், கசிந்துருகி கண்ணீர் பெருக ‘அய்யோ, 2000 ஆண்டுகளாக இப்படி மக்கள் கல்வி, வேலை வாய்ப்பற்று இருக்கிறார்களே’ என்று ஒப்பனை கலையும்போது ஒப்பாரிப் பாட்டை ஒப்புக்காகப் பாடுகிறார்கள் .